Monday, August 09, 2010

ஒரு குருவிக்கு நிகழ்ந்தது.............

ஒரு இளங்காலை வேளை. குதூகலமாக இரை தேடி, தாழப் பறந்த குருவியொன்று காரில் அடிபட்டுக் கீழே விழுந்தது. அது என்ன சக மனிதனா, இடித்தவர் இறங்கி வந்து காப்பாற்ற அல்லது உதவ ? (இக் காலத்தில் மனிதனுக்கும் இதே நிலைதான் என்பது வேறு விடயம்)விழுந்த குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. வீழ்ந்து தவிப்பதை சக குருவியொன்று கண்டது. அருகில் வந்து பார்த்தது. ஏந்திப் பறக்கும் எண்ணம் உதித்திருக்குமெனினும் அதனால் முடியவில்லை. செய்வதறியாது துடித்த ஜீவனைத் தனியே விட்டு குருவி பறந்தது. இரையெடுத்து வந்து, தன் அன்பையும் நேசத்தையும் அரவணைப்பையும் ஒன்றாகக் கலந்து மருந்தெனக் குருவிக்கு ஊட்டியது.மீண்டும் இரையெடுத்து வந்து பார்த்தபொழுதில் உயிரெனக் கலந்தது விட்டுப் போயிருந்தது. அதை உணராச் சக குருவி, கண்ணீர் தளும்பா விழிகளைக் கொண்ட ஒற்றைக் குருவி தனக்குள் அழுதது. தன் சிறு கால்களால் தட்டித் தட்டி எழுப்பியது. குருவி எழவில்லை.சலனமற்ற குருவியை விட்டும் பறந்து போன உயிருக்குக் கூடக் கேட்கும் வண்ணம் சக குருவி அழைத்தது, அழுதது, அலறியது, மன்றாடியது. எதையும் அறியாச் சடலம் காற்றுக்கு மட்டும் சிறு இறகசைத்தபடி வீதியிலே கிடந்தது.
ஆசையாசையாய்ச் சேமித்த வாழ்வின் கனவுகள் நடுவீதியில் கலைந்துபோயிற்று. இரை தேடிப் பறக்கும் எண்ணமின்றி, தன் கூட்டத்தைத் தேடியலையும் எண்ணமின்றி தனது எந்த ஆர்ப்பரிப்புக்கும் இறுதி வரை எழாக் குருவியின் அருகிலேயே உயிர்க்குருவி மௌனித்து அமர்ந்தது...
இது ஒரு குருவிக்கு நிகழ்ந்தது. இதற்கே உள்ளம் பதைத்துப் போயிருப்பீர்கள். விழி கசிந்திருப்பீர்கள். இது போலத்தானே நமது சக மனிதர்களும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே, பெற்றெடுத்து, அன்பு செலுத்தி வளர்த்த தாயொருத்தி இருப்பாள். ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே அவ் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்ற ஆசைகளும் கனவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே வாழும் உரிமையும் இருக்கின்றது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சக மனிதனைத் துன்புறுத்துகிறோம். நமது உடலுறுப்புக்களால், நடவடிக்கைகளால், வார்த்தைச் சாட்டைகளால்... இன்னுமின்னும்... வதைக்கிறோம்.

அக் கணத்தில் அவனது தாய், மனைவி/ கணவன், சகோதர,சகோதரிகள், நண்பர்கள் இன்னும் அவனது பிரியத்துக்குரியவர்கள் அதனைப் பார்த்திருப்பார்களானால் எவ்வளவு துயருருவார்கள் என எண்ணிப் பார்க்கிறோமா?

அவனது வாழும் உரிமையைச் சிதைத்து, அவனது கனவுகள், ஆசைகள் எல்லாவற்றையும் அழித்து அதில் சந்தோஷமடைய எப்படி முடிகிறது நம்மால்? அவனது கண்ணீர்த் துளிகளை அள்ளியெடுத்து, அதை மகிழ்ச்சியெனப் பூசிக்கொள்ள எப்படி இயலுமாக இருக்கிறது நம்மால்?

உயிரற்றுப் போன சக குருவிக்காக வருத்தப்பட யார் கற்றுக் கொடுத்தது அந்தக் குருவிக்கு?

ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட நாம், ஆறறிவெனச் சொல்லிக் கொள்ளும் நாம்... இருக்கிறோம்.
சக மனிதன் உயிர் போனாலும், அவனுக்கு எத்தகைய இடர் வந்தாலும் சிறிதும் பதறாதபடி..சிறிதும் வாடாதபடி..அவன் நிலையை மாற்றச் சிறிதும் சிந்திக்காதபடி..நாம் எல்லாவற்றையும் வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இனியாவது என்ன செய்யப் போகிறோம்...சிந்திப்போமா ?

1 comment:

Anonymous said...

Very touching...